அரசாங்கத்தின் அடக்குமுறை மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் : சம்பிக்க ரணவக்க !


சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்.அரசாங்கத்தின் அடக்குமுறை மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும்.

அது அரசாங்கத்திற்கும், பொருளாதாரத்திற்கும் தாக்கம் செலுத்தும்.அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் நாணய நிதியத்தின் ஒத்தழைப்பை பெற்றுக்கொள்வது சந்தேகத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எரிபொருள் விலை குறைவடைந்துள்ளதால் பணவீக்கம் சற்று குறைவடைந்துள்ளது.பொருளாதார பாதிப்பினால் நடுத்தர மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை வழமைக்கு மாறாக குறைத்துக் கொண்டுள்ளார்கள்.கடந்த ஒக்டோபர் மாதம் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 5,516 மெற்றிக்தொன் எரிபொருள் மாத்திரமே நாடளாவிய ரிதியில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கொள்வனவு நூற்றுக்கு ஐம்பது சதவீதமளவில் குறைவடைந்துள்ளது.இது பொருளாதார பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும்.2022ஆம் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் எரிபொருள் இறக்குமதிக்கு மாத்திரம் 357 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன்,வருமானம் 956பில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவ்வாறாயின் அரசாங்கத்திற்கு இக்காலப்பகுதியில் 600 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.இதில் 513 ருபா பில்லியன் கடன் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எரிபொருளை அதிக விலைக்கு விற்கும் போது அது சகல துறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.எரிபொருள் விலை அதிகரிப்பு மின்சார கட்டணம் உயர்விற்கு முக்கிய காரணியாகும்.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக வரி சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு 89 டொலர் பில்லியனாக காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் ஆண்டு 66 டொலர் பில்லியனாக வீழ்ச்சியடையும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

2025ஆம் ஆண்டு 212 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை எதிர்பார்த்த நாடு தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு சிறந்த நிலையான திட்டங்களை தற்போது வகுக்காவிடின் அது எதிர்காலத்திற்கும் பன்மடங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.நாட்டில் ஏழ்மை,தொழிலின்மை,வறுமை உள்ளிட்ட சமூக பிரச்சனைகள் தொடர்பில் உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டில் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்.மந்தபோசனை தொடர்பில் கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணருக்கு எதிரான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது,ஆனால் இலங்கையில் மந்த போசனை தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச நிறுவனங்கள் வெளிப்படை தன்மையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளன.

சர்வதேசத்தின் ஆலோசனைக்கு அமைய ஊழல் இல்லாத அரச நிர்வாக கட்டமைப்பை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.எரிபொருள் இறக்குமதி தொடர்பில் மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.ஆனால் நிலக்கரி, எரிவாயு கொள்வனவில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் பொறுப்பற்ற தன்மையில் செயற்பட்டால் நாட்டு மக்கள் எவ்விடயத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள்.மக்கள் போராட்டம் தீவிரமடையும்,அது அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல பொருளாதாரத்திற்கும் தாக்கம் செலுத்தும்.

2023 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மூன்று மாத காலத்திற்குள் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டி,நிறைவேற்று குழுவுடன் தொடர்பு கொள்ளும் நிலைக்கு அரசாங்கம் செல்லும் என நம்பிக்கை கொள்ள முடியாது.சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வி அடையும் பட்சத்தில் அடுத்தக்கட்ட திட்டத்தை அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார் \.