மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நாவற்குடா, கொக்குவில் பொது சந்தையின் வியாபார தொகுதிகள் பொதுமக்களின் பாவனைக்கு கையளிப்பு !

உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நாவற்குடா பொது சந்தையின் வியாபார தொகுதி மற்றும் கொக்குவில் வாராந்த சந்தையின்  கசாப்பு கடைகளுடன் கூடிய விற்பனை தொகுதிகள் என்பன புதன்கிழமை (15) அன்று மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு என கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு நகரை அண்டிய நாவற்குடா மற்றும் கொக்குவில் பிரதேசங்களை வர்த்தக ரீதியாக முன்னேற்றும் நோக்கிலும் அப்பிரதேசங்களை சார்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலுமாக குறித்த சந்தைகளின்  விற்பனை தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டன.

உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் பங்களிப்புடனும் மாநகர சபையின் நிதிப் பங்களிப்புடனும் நிர்மாணிக்கப்பட்ட நாவற்குடா மற்றும் கொக்குவில் பொதுச் சந்தைகளின் வியாபார தொகுதிகள் முறையே 53.5 மில்லியன் ரூபாய் மற்றும் 9.3 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

மேற்படி விற்பனை தொகுதிகளை இன்று மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா.மதிவண்ணன் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து பொதுமக்களினதும், வியாபாரிகளினதும் பயன்பாட்டிற்கு என கையளித்தார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதம கணக்காளர் திருமதி.ஹெலன் சிவராஜா, மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர்.சி.துஷ்யந்தன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி கிரிஜா பிரேம்குமார், மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான திருமதி.ஜெயகௌரி ஜெயராஜன், எஸ்.சுதர்சன்  ஆகியோருடன் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.