ஏறாவூர் நகரின் புன்னைக்குடா வீதியில் உள்ள பலசரக்கு கடையொன்றின் களஞ்சியப் பகுதியில் நேற்று (30) பகல் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பலத்த வெடிப்புச் சத்தங்களுடன் தீ பரவலும் கரும்புகை மூட்டமும் காணப்பட்டதனால் அப்பகுதியில் நிலவிய பரபரப்பான சூழலுக்கு மத்தியில், பலசரக்கு கடைத் தொகுதியின் மேல் மாடியில் வசித்த ஒரு பெண்ணும் சிறுவர்களும் அங்கிருந்த சிலரால் ஏணி வழியே கீழிறக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.
அந்த கடைத் தொகுதியில் வெல்டிங் வேலைகள் இடம்பெற்ற நிலையில் வெல்டிங் செய்யும்போது உருவான தீப்பொறிகள் பட்டாசுகளில் தெறிபட்டு, அதனால் பட்டாசுகள் தீப்பற்றிக்கொண்டதாலேயே கடையில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ மேலும் பரவாத முறையில் உடனடியாக அங்கிருந்தவர்களால் அணைக்கப்பட்டது.
எனினும், கடையில் இருந்த சுமார் 10 இலட்ச ரூபாய் மதிப்புள்ள பால்மா, அரிசி, சோடா உள்ளிட்ட பல பொருட்கள் தீயில் கருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.