தனியார் வைத்தியசாலை ஒன்றில் 10 கண் வில்லைகளைத் திருடிய உதவியாளர் கைது !

கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் சத்திர சிகிச்சை அறையிலிருந்த 10 கண் வில்லைகளைத் (கென்டாக்ட் லென்ஸ்கள்)  திருடிய சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறை உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் திருடியதாகக் கூறப்படும் கண் வில்லைகளின் பெறுமதி 369,000 ரூபா என பொலிஸ் அதிகாரி ஒருவர்  கூறியுள்ளார்.

தனியார் வைத்தியசாலையின் கடமைப் பொறுப்பதிகாரி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 45  வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை  கொம்பனித் தெரு பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகிறது.