சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு சிசுபல வேலைத் திட்டத்தின் கீழ் அப்பியாசக் கொப்பிகள் விநியோகம்!


(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சிசுபல வேலைத் திட்டத்தின் கீழ் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு படாசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அங்கத்தவர்களின் சிறுவர்களுக்கு தலா ஒருவருக்கு 1776 ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

இதில் பிரதேசத்தின் 18 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட, தரம் ஐந்தில் கல்வி பயிலும் 266 பாடசாலை மாணவர்களுக்கே இவ் அப்பியாசக் கொப்பிகள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், அதிபர்கள், மற்றும் வலய உதவியாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பிற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர், அதன் அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.