மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் வீசா டெபிட் அட்டை அறிமுகம்!

(அதிரன்)

வங்கிகளின் செயற்பாடுகளை நவீன மயப்படுத்தும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக பிரதேச அபிவிருத்தி வங்கிகள் இன்றைய தினம வீசா டெபிட் அட்டைகளை அறிமுகம் செய்து வைக்கின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு  பிரதேச அபிவிருத்தி வங்கியின் விசா டெபிட் அட்டை அறிமுக நிகழ்வு இன்றைய தினம் (01)  மட்டககளப்பு கிளை முகாமையாளர்   எஸ்.மனோரஞ்சித் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வாக அமைந்த இந் நிகழ்வில், பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட  முகாமையாளர் பி.எம்.டி, சனத், கிழக்கு மாகாண பிரதம முகாமையாளர் திருமதி சௌமியா திலக,  உதவி மாவட்ட முகாமையாளர் கே.சத்தியநாதன் ஆகியோர்  அதிதிகளாக கலந்து கொண்டு வீசா டெபிட் அட்டையை அறிமுகம் செய்து வைத்தனர்.

இன்றைய தினம் நாடு பூராகவும் உள்ள 276 கிளைகளிலும் பிரதேச அபிவிருத்தி வங்கிகள் வீசா டெபிட் வசதிகளை அறிமுகம் செய்து வைத்ததுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 8 கிளைகளிலும் இந் நிகழ்வுகள் நடைபெற்றன.

2011ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பில் பணிகளை ஆரம்பித்த பிரதேச அபிவிருத்தி வங்கி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வருமான மேம்பாட்டுக்கான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரம், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை ஆகிய 8 கிளைகளைக் கொண்டு கடந்த 12 வருடங்களாக பணியாற்றுக்கிறது.  

பிரதேச அபிவிருத்தி வங்கியானது இலங்கையில் 3ஆவது பெரிய வலையமைப்பைக் கொண்டதும் அரசாங்கத்தின் ஒரேயொரு அபிவிருத்தி வங்கியாகவும் இருந்து செயற்படுகிறது.

1985ஆம் ஆண்டு புளத் சிங்கள என்னுமிடத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ரொனி டி மெல் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வங்கியே பிரதேச அபிவிருத்தி வங்கியாகும்.

இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்கள ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையின் சனத்தொகையின் 70 வீதமாக உள்ள கிராமிய மக்களை முன்னேற்றுவதற்காக 85ஆம் ஆண்டு களுத்துறை, குருநாகல், மாத்தறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 18 மாவட்டங்களில் 276 கிளைகளைக் கொண்டு இயங்குகிறது.