மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதில் நான்கு பொலிஸார் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர், அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கடந்த சனிக்கிழமை (06) உத்தரவிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை (5) மாலை 6 மணியளவில் கொக்குவில் 2ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் மதுபோதையில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டார்.
இந்த தாக்குதலில் முச்சக்கரவண்டி சேதமடைந்ததன் காரணமாக அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து, மதுபோதையில் இருந்த இளைஞரை அவரது தாயாரும் சகோதரியும் தாங்கிப் பிடித்தவாறு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அவ்வேளை, அங்கிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கதிரையில் இருக்குமாறு தெரிவிக்க, அந்த இளைஞர் கதிரையை தூக்கி பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல் மேற்கொண்டதில், அவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய பொலிஸார் இளைஞரை மடக்கிப் பிடித்து கைவிலங்கிட்டு, பொலிஸ் நிலைய கைதிக்கூண்டின் வெளிப்பகுதியில் நிறுத்தினர். அப்போது அந்த இளைஞர் அவரது தலையை கைதிக்கூண்டின் கதவில் இடித்துக்கொண்டார்.
அப்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரது செயலை தடுக்க முற்பட்டபோது, இளைஞர் அப்பொலிஸ் அதிகாரியை கடித்து, அவரது சீருடையை கிழித்துள்ளார்.
அந்த பொலிஸ் அதிகாரியை காப்பாற்றச் சென்ற இரு பொலிஸார் மீது இளைஞர், அவரது தாயார் மற்றும் சகோதரி இணைந்து தாக்குதல் மேற்கொண்டனர்.
இதில் காயமடைந்த நான்கு பொலிஸார் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் இளைஞர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை (6) ஆஜர்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
கைதான இளைஞர் முன்னதாக பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் வீதியில் செல்வோர் மீது தாக்குதல் நடத்திய பல சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


.jpg)










