மட்டக்களப்பு சின்ன ஊறணி சின்னஞ்சிறு கல்விமான்கள் முன்பள்ளியின் 13 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பு வைபவமும்

(சித்தா)

மட்டக்களப்பு சின்ன ஊறணி சின்னஞ்சிறு கல்விமான்கள் முன்பள்ளியின் 13 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பு வைபவமும் 2024.02.10 ஆம் திகதியன்று மட்/ஊறணி சரஸ்வதி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக முதன்மை உளவளத்துணையாளரும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான முதன்மைப் பயிற்றுநருமான திரு.முத்துராஜா புவிராஜா, சிறப்பு அதிதியாக மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.திருச்செல்வம் மேகராஜா , விஷேட அதிதிகளாக மட்/ஊறணி சரஸ்வதி வித்தியாலய அதிபர் திரு.ச.கணேசரத்தினம் மற்றும் பிரதி அதிபர் திரு.த.ஆனந்தராஜ், சின்னஊறணி நூலகப் பொறுப்பாளர் நேசராணி ஹரிதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இங்கு ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் மாலை அணிவிக்கப்பட்டு  அதிதிகள் வரவேற்கப்பட்டனர். மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிள்ளைகள் ஆடல், பாடல்கள், பேச்சு, விழிப்புணர்வு நாடகம் போன்ற அரங்க நிகழ்ச்சிகள் மூலம் தமது ஆற்றல் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் முன்பள்ளி ஆசிரியர்களது நடனமும் மேடையேற்றப்பட்டது. நிறைவில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் அதிதிகளினால் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவை சிறப்பான முறையில் பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன்  ஒழுங்கமைத்து செயற்படுத்திய முன்பள்ளியின் அதிபர், ஆசிரியர்களுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கதாகும்.