செவ்விளநீர் உற்பத்திக் கிராமம் ஹோமாகம தாம்பேயில் ஆரம்பம் !



ஹோமாகம தாம்பேயில் செவ்விளநீர் உற்பத்திக் கிராமத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம அபிவிருத்திக் குழுவின் தலைவரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு 85 செவ்விளநீர் கன்றுகளை நடும் மாதிரி கிராமங்களாக 85 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் முதலாவது செவ்விளநீர் உற்பத்திக் கிராமமாக ஹோமாகம தம்பேவை மையமாகக் கொண்டு இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் கீழ், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட தரமான செவ்விளநீர் மரங்களை கொண்ட தோப்பாக அப்பகுதி பிரபலப்படுத்தப்படும்.

பிரதேசத்திலுள்ள விவசாயிகளின் சமூக அமைப்பு உட்பட நூறு விவசாய குடும்பங்களுக்கு விசேடமாக உருவாக்கப்பட்ட உயர்தர செவ்விளநீர் கன்றுகள் வழங்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய அமைச்சர்,
நாட்டில் ஆரம்பிக்கும் எந்தவொரு திட்டத்தையும் முன்னோடித் திட்டமாக இந்தப் பிரதேசத்துக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் எப்போதும் முயற்சித்து வருகிறோம். அதற்கேற்ப, கொழும்பில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த விவசாயப் பொருட்களின் சந்தையை மீகொட பொருளாதார மத்திய நிலையம் ஊடாக ஹோமாகம பிரதேசத்துக்குக் கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சி செய்துள்ளோம் . நாடு முழுவதும் அவ்வாறான பல பொருளாதார மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பிரதேசத்தில் வசிக்கும் 850க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு முறையான வழிகாட்டல்களை வழங்கியதன் மூலம், இந்த செவ்விளநீர் பயிர்ச்செய்கையை ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் செய்கை பண்ணுவதற்கான சகல வசதிகளும் கிடைத்துள்ளன. மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக அவற்றை சேகரிக்கும் வசதி உள்ளது.

கிராமிய கைத்தொழில் அமைச்சராக நான் நிறுவிய, பானலுவ கைத்தொழில் கிராமத்தில் செவ்விளநீரை ஏற்றுமதி செய்வதற்கான தொழிற்சாலையொன்று அடுத்த சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேவையான தரத்தில் செவ்விளநீரை உற்பத்தி செய்யும் வசதி இப்பகுதியில் உள்ளது.

செவ்விளநீர் தொழில்துறையில் இலங்கையின் மிகப்பெரிய போட்டியாளராக தாய்லாந்து உள்ளது. இவர்களின் தேங்காய் தண்ணீர் மற்றும் செவ்விளநீர் தண்ணீர் குறைந்த விலையில் கூடுதல் மதிப்புடன் வெளிநாட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் தண்ணீர் மற்றும் செவ்விளநீர் நீரை ஒரு முன்னணி நிறுவனம் மட்டுமே வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. ஏற்றுமதிக்கான சந்தையை தயார்படுத்தும் போது போக்குவரத்து போன்ற காரணிகளில் கவனம் செலுத்தி, விரிவான ஆய்வு நடத்தி, குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய பொதிக்கான முறைகளைப் பயன்படுத்துவதும் முக்கியம் தெரிவித்தார்.