அரிசி பெறும் குறைந்த வருமானம் கொண்ட 28 இலட்சம் குடும்பங்களை தேர்வு செய்வதில் சிக்கல் !



குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு பொருத்தமான குடும்பங்களை இனங்காணுவது மிகவும் சிக்கலாக மாறியுள்ளதாக நிதியமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் பயனாளிகள் தேர்வு செய்வதில் மாவட்ட மற்றும் உள்ளாட்சி அளவில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நலன்புரி சபை பொருத்தமான குடும்பங்களைத் தெரிவு செய்த போதிலும், பிரதேச செயலாளர் அலுவலகங்களின் தரவுத்தளத்தின்படி நலன்புரிப் பயனாளிகளாகத் தகுதியுடைய குடும்பங்களின் இறுதி எண்ணிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பயனாளிகளை இனங்கண்டு கொள்வதில் பிரச்சினை இல்லை எனவும், ‘அவஸ்வசும’ திட்டத்தில் உள்வாங்கப்படாத அதிகளவான சமுர்த்தி பயனாளிகள் இருப்பதாகவும் பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் மேலதிக செயலாளர் நலிகா பியசேன சுட்டிக்காட்டியுள்ளார். மேன்முறையீடுகளைச் செய்ய முடியாதவர்கள் மற்றும் சமுர்த்திப் பலன்களை இழந்த குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்த குடும்பங்கள், அந்தக் குடும்பங்களைத் தொடர்பு கொள்ளும் முறை குறித்து தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மாவட்டச் செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.