கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா - 2024

(சித்தா)
ஆறுதல் நிறுவனத்தின் நெறிப்படுத்தலில் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் 2019/2020 கல்வியாண்டில் சித்தியடைந்த முன்பள்ளி ஆசிரியர்களிற்கான பட்டமளிப்பு விழா நிகழ்வானது 04.05.2024 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெயா தம்பையா தலைமையில் தன்னாமுனை மியானி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார்,  கௌரவ அதிதிகளாக றொட்டறி கழகம் கொழும்பு கிழக்கைச் சேர்ந்த றொட்டேரியன் சாய்புடீன் அடமாலி, றொட்டேரியன் டொக்டர் டீமந்த வீரசூரியா, மற்றும் ஏனைய பிராந்திய றொட்டறிக் கழக அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

இங்கு ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு நாதஸ்வர மேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

அதனைத் தொடர்ந்து இறைபதமடைந்த ஆறுதல் நிறுவனத்தின் தாபகரும் முன்னைநாள் வடக்கு கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளருமான அமரர் சுந்தரம் டிவகலாலா அவர்களது உருவப் படத்திற்கு முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் மட்டக்களப்பு மாவட்ட கற்கை நெறி இணைப்பாளர் முத்துராஜா புவிராஜா அவர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு ஒரு நிமிட நினைவுப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

பின்னர் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் இணைப்பாளர் பேராசிரியர் சு.மோகனதாஸ் - வேந்தர் வவுனியாப் பல்கலைக்கழகம் அவர்களினால் பட்டமளிப்பு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மட்டக்களப்பு, மூதூர், சம்மாந்துறை, அம்பாறை, திருகோணமலை ஆகிய வலயங்களைச் சேர்ந்த 198 ஆசிரியர்களுக்கு அதிதிகளினால் பதக்க மாலை அணிவித்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் கற்கைநெறி இணைப்பாளர்கள், நிலைய இணைப்பாளர்கள், வளவாளர்கள், முன்பள்ளி ஆசிரியர்களது பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.