உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விசேட நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்துவோம் : சஜித் !



உயர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளையும் விசாரணையாளர்களையும் இணைத்துக்கொண்டு உண்மையை வெளிப்படுத்துவோம். விசேட நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்தி விசாரணை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நீர்கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,
தற்போது நாட்டு மக்கள் தெளிவான தீர்மானமொன்றை எடுத்திருப்பார்கள். ரணில் விக்கிரமசிங்கவும் அநுரகுமார திசாநாயக்கவும் அரசியல் ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக ஒரு பக்கமாக இருக்கின்றார்கள். ஐக்கிய மக்கள் சக்திதான் பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்றது.

டீல் செய்கின்ற அரசியல் சூழ்ச்சிக்காரர்களின் பக்கம் செல்வதா? அல்லது வெளிப்படையாக நின்று போராடி பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பவர்களின் பக்கம் இருப்பதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

மக்களை கைவிட்டுவிட்டு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் அரசியல் டீல் செய்துகொள்கின்ற கலாசாரத்தை நிராகரித்து, பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குகின்ற சமூக டீல் ஒன்றுக்கே சென்றுள்ளோம்.

ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் காணிகளும் வீடுகளும் வழங்கப்பட்டதைப் போன்ற செயற்றிட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம்.

முத்துராஜாவெல காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வந்தபோது அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பொன்றை பெற்றுக்கொள்வதற்கு ஐக்கிய சட்டத்தரணிகள் குழுவுக்கு முடியுமாக இருந்தது.

மீனவர்களுக்கு பல சலுகைகள்

மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கும் எரிபொருள் நிவாரணங்களை வழங்குவோம். தற்பொழுது மீன்பிடி உபகரணங்களின் விலை அதி உச்சத்தை தொட்டிருக்கிறது. வருமானம் குறைந்த மீனவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். பல்வேறு முறைகளில் மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ள மீனவ சமூகம் இன்று அனாதரவாகியுள்ளனர்.

எனவே மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்ப ரீதியாகவும் சகல வசதிகளையும் வழங்கி மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

 

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு கூறியபோதிலும் இதுவரையும் போதுமான அளவு நட்டஈடு கிடைக்கப்பெறவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இந்த அனைத்து மீனவர்களுக்கும் நியாயத்தைப் பெற்றுக்கொடுப்போம்.

பராட்டே சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகள்

பராட்டே சட்டத்தை கைவிடுமாறு கோரி நான்கு வருட காலமாக முன்னெடுத்த போராட்டத்துக்கு பிரதிபலனாக தற்காலிகமாக அந்த சட்டம் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குமாறு கூறியபோதும் அது இன்னும் இடம்பெறவில்லை.

பராட்டே சட்டமூலத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்கள் குறித்த, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏல விற்பனையை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தொடர்ந்தும் நீடித்து இவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொணர்வோம்

உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொணர்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். ஐக்கிய மக்கள் சக்தி முதல் தடவையாக ஒரு குழுவாக இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை முன்வைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளையும் விசாரணையாளர்களையும் இணைத்துக்கொண்டு இதன் உண்மையை வெளிப்படுத்துவோம். விசேட நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்தி விசாரணை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்வோம்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இவற்றை எழுத்து மூலமாக வழங்கியிருக்கிறோம். இவை ஹன்சாட்டில் பதியப்பட்டிருக்கிறது. அரசியல் இலாபங்களை பெற்றுக்கொண்டு பொய்களை உருவாக்குபவர்கள் இருந்தாலும் நாம் அவ்வாறான பொய்களை சொல்கின்றவர்கள் அல்ல என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.