சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை; மனித பாவனைக்குதவாத உணவுகள் அழிப்பு !


சாய்ந்தமருது பிரதேசத்தில் உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்.

சுகாதாரமற்ற சிற்றுண்டிப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜெ.மதன் தலைமையில் சுகாதார குழுவினர் இச்சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட போது உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டது.

உணவகங்கள் சுத்தமின்மை, தவறான உணவு கையாளுகை, நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவை தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சிரேஷ்ட மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெரின், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.