முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரனுக்கு பிணை!

 


முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (08) இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ. 1.5 மில்லியனை இலஞ்சமாக பெற உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு இவ்வாறு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த மார்ச் 25ஆம் திகதி அவரிடம் வாக்குமூலம் பெற்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, அவரை கைது செய்திருந்தது.

இதனையடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட எஸ். வியாழேந்திரன் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை தலா ரூ. 1 மில்லியன் கொண்ட 5 சரீரப் பிணைகளிலும், ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

குறித்த வழக்கில், கடந்த வருடம் கைது செய்யப்பட்ட எஸ். வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.