
விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லை பெற்றுக்கொள்வதற்காக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு அறிமுகப்படுத்திய நிவாரண வட்டி அடிப்படையிலான 'மடபண' கடன் திட்டம் திங்கட்கிழமை 1ஆம் திகதி முதல் 2025.11.15ஆம் திகதி வரை செயற்படுத்தப்படும் என அபிவிருத்தி நிதித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த கடன் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரூபா வரையில் கடன் பெற்றுக்கொள்ள முடிவதுடன், குறித்த கடன் தொகையை 180 நாட்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் என்று அபிவிருத்தி நிதித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அபிவிருத்தி நிதித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலைக்கு நெல்லுக்கான விலையை வழங்க வேண்டும் என்ற நோக்கில் 2025ஆம் ஆண்டு சிறுபோக விவசாயத்தில் நெல் கொள்வனவுக்கான சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு நிவாரண வட்டி அடிப்படையில் 'மடபண' கடன் திட்டத்தை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த கடன்திட்ட முறைமையில் அடையாளப்படுத்தப்பட்ட குழுவினரான சிறு மற்றும் நடுத்தர நெல் உற்பத்தி ஆலையாளர்களின் உற்பத்தி கொள்ளளவு 25 மெற்றிக் தொன்னாக காணப்பட வேண்டும். குறித்த அரச நிறுவனத்தில் பெற்றுக்கொண்ட செல்லுபடியான வியாபார பதிவுச்சான்றிதழ் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் வெளியிடப்பட்ட அனுமதிப்பத்திரம் சகல கடன் விண்ணப்பதாரிகள் வசமிருத்தல் வேண்டும்.
இந்த கடன் திட்ட முறைமையின் கீழ், 7 சதவீத வருடாந்த வட்டி வீதத்தின் அடிப்படையில் 50 மில்லியன் ரூபா கடனை பெற்றுக்கொள்ளக்கூடியதுடன், குறித்த கடன் தொகையை 180 நாட்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும்.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, டி.எப்.சி.சி வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, சனச அபிவிருத்தி வங்கி, அமானா வங்கி, கார்கில்ஸ் வங்கி, பான் ஏசிய வங்கி ஆகிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த கடன் திட்ட முறைமையில் பங்காளர்களாக உள்ளன.
இந்த கடன் திட்ட முறைமையின் கீழ் வங்கி ஊடாக விடுவிக்க நிச்சயிக்கப்பட்டுள்ள முழுமையான கடன் தொகையின் பெறுமதி 6500 மில்லியன் ரூபாவாக காணப்படுவதுடன் விவசாயிகளின் நெல்லுக்கான நியாயமான விலையை உறுதி செய்வதற்காக விவசாய திணைக்களத்தால் வெளியிடப்பட்ட குறைந்தபட்ச விலையின் கீழ் நெல்லை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2024.12.30ஆம் திகதி அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய ஆரம்பிக்கப்பட்ட இந்த கடன் திட்ட முறைமை 2025.07.01ஆம் திகதி முதல் 2025.11.15ஆம் திகதி வரை செயற்படுத்தப்படும்.
இதற்கு மேலதிகமாக கடந்த 2024 / 2025 பெரும்போக விவசாயத்தில் இந்த மடபண கடன் திட்ட முறைமையின் கீழ் 6850 மில்லியன் ரூபா வரையினான நிதி நெல் கொள்வனவுக்காக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.