விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - பிமல் ரத்நாயக்க



வாகன சாரதிகள் ஆசனப்பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதன் மூலம் அவர்களுக்கு தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கு வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (1) கொழும்பிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து தரிப்பிடங்களுக்குச் சென்று பேருந்து சாரதிகள் ஆசனப்பட்டியை அணிந்திருக்கின்றனரா என்று அமைச்சர் கண்காணிப்பில் ஈடுபட்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2011ஆம் ஆண்டு இலகு மற்றும் கனரக வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து மற்றும் லொறி சாரதிகளுக்கு இது கட்டாயப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

எனவே, கடந்த 3 மாதங்களாக இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, இந்த நடவடிக்கை தற்போது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மாத்திரமின்றி, பின் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

வீதி விபத்துக்களின்போது அதிக மரணங்கள் பதிவாகுவதற்கும் இது ஒரு பிரதான காரணியாக உள்ளது. ஆசனப்பட்டிகளை அணிவதால் பெருமளவான விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.

இலகுரக வாகனங்களிலும் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டிகளை அணிந்தால் விபத்துக்கள் இடம்பெற்றாலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

ஆசனப்பட்டி அணியாதவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. அவதானத்துடன் பயணித்து, விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

எனவே, ஆசனப்பட்டி அணிதல் தொடர்பில் இனி தீவிர கண்காணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. சில இடங்களில் ஆசனப்பட்டிகள் மறைக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறானவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.