வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளமை அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இராணுவ பிரசன்னத்துக்கு பாரியதொரு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஹர்த்தாலினால் முழுமையாக முடங்க வேண்டும். எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

முத்தையன்கட்டு இளைஞன் கொலை வன்மையாக கண்டித்தக்கது. பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.செம்மணி இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (10) ஊடக சந்திப்பொன்றை நடத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சனிக்கிழமை (09) அதிகாலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.2025.08.08 ஆம் திகதியன்று நான்கு அல்லது ஐந்து பேர் முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.நால்வர் முகாமில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள்.ஒருவர் காணாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டு, காணாமல் போனவரின் உடல் தான் குளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

முகாமுக்குள் வைத்து இராணுவத்தினர் தம்மை மிக மோசமாக தாக்கியதாக தப்பித்து வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இராணுவத்தினரால் தாக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் குளத்தில் வீசப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை செய்யப்பட வேண்டும். பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம்.இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் மாலை முல்லைத்தீவு பொலிஸாரினால் ஒருசில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அதில் மூவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதான விடயம் யாதெனில் ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது பிரயோசனமற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அப்பிரதேச மக்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.இதற்கு செம்மணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

சித்துப்பாத்தி செம்மணி பகுதியில் குறுகிய காலத்துக்குள் 147 இற்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.பல வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள் என்பது தற்போது தெரியவருகிறது.

இவ்வாறான பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளதாகலும் அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.அதேவேளை இராணுவ பிரசன்னத்துக்கு பாரியதொரு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தாலில் ஈடுபடுமாறு சகல தரப்பினரிடமும் கோருகிறோம்.எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சகல நடவடிக்கைகளையும் கைவிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக முடங்க வேண்டும்.இதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகிறோம்.ஏனைய அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள்,மக்கள் அமைப்புக்கள்,வர்த்தகர்கள்,ஒன்றிணைய வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன் என்றார்.