நேற்று, 'Unite the Kingdom' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் லண்டனில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.
இந்தப் போராட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்
குடியேற்றம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான குரல்கள் இந்தப் போராட்டத்தில் ஓங்கி ஒலித்தன.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 1,000-க்கும் மேற்பட்ட காவல்படை களமிறக்கப்பட்டது. இருந்தும், ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றுள்ளன . அதில் பொலிஸார் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஒன்லைன் ஊடாக பேசிய எலான் மஸ்க்
இந்தப் போராட்டத்தினரிடம் ஆன்லைனில் பேசிய உலகில் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றும், புதிய அரசாங்கத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
தற்போது பிரிட்டனின் வெளிநாட்டினரின் குடியேற்றம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதை எதிர்த்துதான் இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.
சமீபத்தில், இதே மாதிரியான போராட்டம் ஆஸ்திரேலியாவிலும் முன்னெடுக்கப்பட்டது.
யார் இந்த டாமி ராபின்சன்?
ஸ்டீபன் யாக்ஸ்லி-லெனான் என்ற இயற்பெயர் கொண்ட டாமி ராபின்சன் ஒரு பிரிட்டிஷ் தீவிர வலதுசாரி ஆர்வலர் ஆவார். 2000களின் பிற்பகுதியிலும் 2010களிலும் இஸ்லாமிய வெறுப்பு வார்த்தை பேச்சுகள் மற்றும் வன்முறை தெருப் போராட்டங்களுக்குப் பெயர் பெற்ற ஒரு குழுவான இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக்கின் நிறுவனர் ஆவார்.
வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நடத்தைக்காக 2018இல் எக்ஸ் தளத்திலிருந்தும், வெறுப்பு பேச்சுக் கொள்கைகளை மீண்டும் மீண்டும் மீறியதற்காக 2019இல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்தும் அவர் தடை செய்யப்பட்டார்.
2022இல் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தைக் கைப்பற்றும் வரை அவரது செல்வாக்கு குறைந்தது. ஆனால், இப்போது அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
டாமி ராபின்சன் அமெரிக்க வலதுசாரி குழுக்களுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டார். ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் இன்ஃபோவர்ஸ் போன்ற ஊடகங்களில் தோன்றினார். மேலும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மத்திய கிழக்கு மன்றத்திலிருந்து நிதியுதவி பெற்றார்.
ஆகஸ்ட் 2024இல், சவுத்போர்ட்டில் ஒரு கொடிய கத்திக்குத்துக்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர் ஒரு முஸ்லிம் என்ற தவறான கூற்றுகளைப் பரப்பினார்.
டாமி ராபின்சன் மீது 2005இல் தாக்குதல், 2012இல் பாஸ்போர்ட் மோசடி, 2014இல் அடமான மோசடி மற்றும் 2018இல் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பல குற்றவியல் தண்டனைகள் உள்ளன. அவர் நான்கு தனித்தனி சிறைத் தண்டனைகளை அனுபவித்துள்ளார். ராபின்சன் கடந்த அக்டோபரில் இந்தப் பேரணியைத் திட்டமிட்டிருந்தார். ஆனால், வழக்கு ஒன்றின் காரணமாக அவர் அப்போது சிறையில் இருந்தார்.

















