பாதிப்புக்கள் குறித்த முழுமையான அறிக்கையை தயாரிப்பதற்கு 3 மாதங்கள் செல்லும் !

உலக வங்கி தற்போது வெளியிட்டிருப்பது ஆரம்ப கட்ட மதிப்பாய்வு அறிக்கையாகும். முழுமையான மதிப்பாய்வு அறிக்கையை தயாரிப்பதற்கு 3 மாதங்களேனும் செல்லும். பாதிப்புக்கள் குறித்த முழுமையாக அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதற்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச உத்தியோகத்தர்கள் சுற்றி நிரூபங்களுக்கமையவே பணியாற்றுகின்றனர். 25 000 கொடுப்பனவு வழங்குதல் தொடர்பில் தெளிவான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பெரும்பாலான மாவட்டங்களில் 90 சதவீதம் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் மாத்திரமே இந்த கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்துக்குள் முழுமையாக இந்த கொடுப்பனவுகளை வழங்க முடிக்க எதிர்பார்த்துள்ளோம்.

மலையகம் உட்பட ஏனைய பகுதிகளில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தற்போது மீண்டும் மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதனால் தான் அவர்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை கூடிய விரைவில் அவர்களது சொந்த இல்லங்களில் மீளக் குடியமர்த்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். எவ்வாறிருப்பினும் பாதுகாப்பற்ற இடங்களில் அவர்களை குடியேற்ற முடியாது. அதுவரை அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கான நிதி பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் இவ்விடயத்தில் நேரடியாக அவதானம் செலுத்தியுள்ளார். எனவே இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்.

பாதிப்புக்கள் குறித்து இன்னும் முழுமையான மதிப்பீடுகள் செய்யப்படவில்லை. உலக வங்கியின் ஒத்துழைப்புடன் இந்த மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் தெரிவித்திருந்தார். அதற்கமைய ஆரம்ப மதிப்பீடாகவே 4.1 பில்லியன் பாதிப்புக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமையான மதிப்பாய்வு அறிக்கையை தயாரிப்பதற்கு சுமார் 3 மாதங்களேனும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.