சீரற்ற வானிலை சேதங்கள் குறித்து வெளியான அறிவிப்பு !


கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளில், அதிகளவான வீட்டுச் சேதங்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில், இந்த அனர்த்தத்தினால் இதுவரை கண்டி மாவட்டத்தில் 1,568 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த மாவட்டத்தில் 14,111 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இரண்டாவது அதிகளவான வீட்டுச் சேதங்கள் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 767 வீடுகள் முழுமையாகவும், மேலும் 3,742 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

மூன்றாவது அதிகளவான வீட்டுச் சேதங்கள் புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 627 வீடுகள் முழுமையாகவும், மேலும் 20,813 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முறையே குருநாகல் மாவட்டத்தில் 594 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 578 வீடுகளும், கேகாலை மாவட்டத்தில் 317 வீடுகளும், அனுராதபுர மாவட்டத்தில் 234 வீடுகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 225 வீடுகளும் இந்த அனர்த்தத்தினால் முழுமையாக அழிவடைந்துள்ளன.

இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 86,147 குடும்பங்களைச் சேர்ந்த 330,443 நபர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக கண்டி மாவட்டத்தில் 80,375 குடும்பங்களைச் சேர்ந்த 287,364 நபர்களும், கண்டி மாவட்டத்தில் 54,716 குடும்பங்களைச் சேர்ந்த 171,127 நபர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 27,234 குடும்பங்களைச் சேர்ந்த 90,140 நபர்களும், குருநாகல் மாவட்டத்தில் 26,474 குடும்பங்களைச் சேர்ந்த 88,899 நபர்களும், மன்னார் மாவட்டத்தில் 23,704 குடும்பங்களைச் சேர்ந்த 77,694 நபர்களும், கேகாலை மாவட்டத்தில் 23,324 குடும்பங்களைச் சேர்ந்த 83,482 நபர்களும், அனுராதபுர மாவட்டத்தில் 22,562 குடும்பங்களைச் சேர்ந்த 74,084 நபர்களும், பதுளை மாவட்டத்தில் 22,257 குடும்பங்களைச் சேர்ந்த 73,547 நபர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 19,092 குடும்பங்களைச் சேர்ந்த 74,277 நபர்களும் அனர்த்தத்தினால் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களாகப் பதிவாகியுள்ளன.

அத்துடன், ஏற்பட்ட அனர்த்தத்தினால் இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை 640 என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


இதில் அதிகளவான உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 234 ஆகும்.

இரண்டாவது அதிகளவான உயிரிழப்புகள் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 90 ஆகும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 89 உயிரிழப்புகளும், குருநாகல் மாவட்டத்தில் 61 உயிரிழப்புகளும், புத்தளம் மாவட்டத்தில் 36 உயிரிழப்புகளும், கேகாலை மாவட்டத்தில் 32 உயிரிழப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 29 உயிரிழப்புகளும் அதிகளவான மரணங்களாகப் பதிவாகியுள்ளன.

மேலும், ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக நாடு முழுவதும் உள்ள 847 பாதுகாப்பு முகாம்களில் 26,103 குடும்பங்களைச் சேர்ந்த 82,813 நபர்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகளவான பாதுகாப்பு முகாம்கள் கண்டி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 279 பாதுகாப்பு முகாம்களில் 7,952 குடும்பங்களைச் சேர்ந்த 27,227 நபர்கள் தங்கியுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக அதிகளவான பாதுகாப்பு முகாம்கள் நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அது 211 ஆகும்.

அங்கு 6,652 குடும்பங்களைச் சேர்ந்த 20,825 நபர்கள் தங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் 147 பாதுகாப்பு நிலையங்களும், கேகாலையில் 104 பாதுகாப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் முறையே 5,856 குடும்பங்களைச் சேர்ந்த 17,444 நபர்களும் மற்றும் 2,980 குடும்பங்களைச் சேர்ந்த 8,658 நபர்களும் தங்கியுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.