பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் ஜனநாயகமற்ற மாற்றங்களை ஏற்படுத்த முயலும் அரசாங்கம் - எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு !


அரசாங்கம், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் ஜனநாயகமற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற வகையில் திருத்தத்தை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

பல்கலைக்கழக கல்வியாளர்கள், நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் முறையான ஆலோசனைகள் இன்றி இத்தகைய ஒரு முக்கியமான மாற்றம் மேற்கொள்ளப்படக்கூடாது.

அதற்குப் பதிலாக, முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து எந்தவொரு உத்தியோகபூர்வ உரையாடலும் அல்லது பொதுத் தெளிவும் இன்றி அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தில், பீடாதிபதிகள் மற்றும் பிரிவுகளுக்கான பொறுப்பதிகாரிகள் (Heads of Departments) பல்கலைக்கழக கல்வியாளர்கள் தேர்ந்தெடுக்கும் தற்போதைய முறையை நீக்குவது மற்றும் அந்த அதிகாரத்தை உபவேந்தருக்கோ (Vice Chancellor) அல்லது ஆளும் சபையிடமோ (Governing Council) மாற்றுவது போன்ற முக்கிய மாற்றங்கள் அடங்கியுள்ளன.

உயர்கல்வித் துறை ஏற்கனவே பதட்டங்களை எதிர்கொண்டுள்ள ஒரு நேரத்தில், பிரிவுகளுக்கான பொறுப்பதிகாரிகளை நியமிக்கும் தன்னிச்சையான அதிகாரத்தை உபவேந்தருக்கு வழங்குவது அல்லது பல்கலைக்கழக சபைக்குள் அதிகாரத்தை மையப்படுத்துவது கடுமையான சிக்கல்களை உருவாக்கலாம்.

மேலும், புதிய திருத்தத்தை பாராளுமன்றம் அங்கீகரிப்பதற்கு முன்னரே, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பீடாதிபதிகள் மற்றும் பிரிவுகளுக்கான பொறுப்பதிகாரிகளின் நியமனங்களைத் தற்காலிகமாக நிறுத்துமாறு உபவேந்தர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த அறிவுறுத்தல் சட்டபூர்வமான அடிப்படை இல்லாதது. ஸ்தாபிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதுள்ள சட்டத்துக்கு முரணானது. உபவேந்தர்கள் தற்போது அமுலில் உள்ள சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.

இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக நடைமுறையின் சரிவையும், சர்வாதிகார முடிவெடுக்கும் திசையை நோக்கி நாட்டை வழிநடத்த ஒரு முயற்சியையும் நிரூபிக்கிறது. பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர், திருத்தச் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, பரந்தளவிலான ஆலோசனைகளில் ஈடுபடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதிகாரத்தை மையப்படுத்தும் அல்லது பங்குதாரர்களின் பங்கேற்பை பலவீனப்படுத்தும் மாற்றங்களை அன்றி, ஆதாரம் சார்ந்த, நியாயப்படுத்தக்கூடிய சீர்திருத்தங்கள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும்.