தித்வா புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நவம்பர் 12, 18 மற்றும் 25ஆம் திகதிகளில் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தாகக் கூறப்படுவதை ஆதரத்துடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பிற்கு சவால் விடுக்கின்றோம். இந்த பேரிடரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிட்டு அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (10) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில்;
நவம்பர் 12, 18 மற்றும் 25ஆம் திகதிகளில் தித்வா புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தாகக் கூறப்படுவதை ஆதரத்துடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பிற்கு சவால் விடுக்கின்றோம். நவம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் தித்வா புயல் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூரல்களே முன்வைக்கப்படுகின்றன. அரசியல் நோக்கங்களுக்காக இந்த எதிர்வு கூரல்கள் உதாசீனப்படுத்தப்பட்டால் காலநிலை தொடர்பில் எதிர்காலத்தில் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத நிலைமை தோன்றும். ஒக்டோர் - நவம்பர் காலத்தில் இந்து சமுத்திரத்தில் வழமையாக ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பிலேயே 13ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. 18ஆம் திகதி குறித்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவிழந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
மாறாக அந்த சந்தர்ப்பத்தில் 'தித்வா' என்ற பெயர் கூற குறிப்பிடப்படவில்லை. 18ஆம் திகதி இரவு வங்காள விரிகுடாவை அண்மித்து மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அது 22 - 24ஆம் திகதி வரை சுமாத்திரா, மலேசியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கடந்து சென்றது. இதன் தாக்கத்தால் அந்த நாடுகளில் சுமார் 1200 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, சூறாவளியாக வலுப்பெற்றதன் பின்னர் 'சென்யார்' எனப் பெயரிடப்பட்டது.
எமது வளிமண்டலவியல் திணைக்களம் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் அதனை அவதானித்து, அதன் தாக்கம் கடற்பிராந்தியத்திலேயே அதிகமாகக் காணப்படும் என எச்சரித்தது. அந்த எச்சரிக்கையை பின்பற்றியமையால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ள முடிந்தது. 25ஆம் திகதியின் பின்னரே மூன்றாவது காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஓரளவு முன்னாயத்தங்கள் செய்யப்பட்டிருந்தன.
27ஆம் திகதி காலை வேளையின் பின்னரே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று சூறாவளியாக மாற்றமடைந்தது. அதன் பின்னரே அது 'தித்வா' எனப் பெயரிடப்பட்டது. இந்த சூறாவளி கிழக்கு கடல் ஊடாக தென்னிந்தியா நோக்கி நகரும் என எதிர்வு கூறப்பட்ட போதிலும், அதன் நகர்வு பாதையில் மாற்றம் ஏற்பட்டு நாட்டுக்குள் பிரவேசித்தது. அது மாத்திரமின்றி இந்த சூறாவளி சுமார் 48 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் அதாவது 48 - 72 மணித்தியாலங்கள் நாட்டுக்குள்ளிருந்து மிகவும் மந்தமாகவே நகர்ந்தது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்களுக்கமைய மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்த பெரும்பாலான பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறவில்லை. சில பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பு படையினரால் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். எவ்வாறிருப்பினும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் உயிர் முன்னாயத்தங்களாலேயே பாதுகாக்கப்பட்டது.
வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் என அனைத்தும் தமது கடமைகளை சரிவர செய்துள்ளன. எவ்வாறிருப்பினும் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்காக எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த ஒரு புயலால் 1242 மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் ஒரே இந்தளவு எண்ணிக்கையிலான மண்சரிவுகள் ஒருபோதும் பதிவாகவில்லை. உயிரிழப்புக்களை தடுக்க முடியாது போனமைக்கு இதுவே காரணமாகும். எனவே இந்த சம்பவத்தை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்றார்.


.webp)










.webp)