காட்டு யானை மீது தீ வைத்த விவகாரம் - சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்



அநுராதபுரத்தின் மிஹிந்தலை - சீப்புகுளம், அம்பகஹவெல பகுதியில் காட்டு யானை மீது தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அநுராதபுரம் மேலதிக நீதவான் லக்மாலி ஹெட்டியாராச்சி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

காட்டு யானையை எரித்து சித்திரவதை செய்யும் விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மூன்று சற்தேக நபர்கள் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யானையின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மரணத்திற்கான காரணம் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய் மற்றும் தீக்காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சிஎன தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள், 42, 48 மற்றும் 50 வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.