பொலிஸார் துரத்தி வந்த கார் மோதி கோர விபத்து !


யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று இரவு 8.15 மணியளவில் நவாலி, மூத்த நயினார் ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினைத் துரத்தி வந்த நிலையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், வீதியோரத்தில் இருந்த தையல் கடை மற்றும் மற்றுமொரு கடைக்குள் புகுந்து மோதியுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் தையல் கடையின் முன்னால் நின்றுகொண்டிருந்த மூவர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் இரண்டு கடைகளும், மூன்று தையல் இயந்திரங்களும் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் துரத்தி வந்தமையாலேயே கார் மிக வேகமாக வந்து விபத்துக்குள்ளானதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தணிக்க, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.