அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு, 29 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, மற்றுமொரு துப்பாக்கிதாரியை நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருவதோடு, சம்பவ இடத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு பொது மக்களை வலியுறுத்தி உள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த 30 வயதுடைய நபர், "சுமார் 10 பேர் தரையில் கிடந்ததையும், எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்தி கிடப்பதையும் நான் கண்டேன்," என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய யூத நிர்வாகக் குழுவின் இணைத் தலைமை நிர்வாகி அலெக்ஸ் ரிவ்சின், ஸ்கை செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில்,
ஹனுக்கா (Hanukkah) யூத மத திருவிழாவைக் கொண்டாடுவதற்காக கடற்கரையில் நடைபெற்ற நிகழ்வின்போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. ஹனுக்கா திருவிழா சூரியன் மறையும் நேரத்தில் ஆரம்பமானது.
“இது மகிழ்ச்சியான ஒரு தருணத்தை நினைவுகூர ஒன்றுகூடிய யூத சமூகத்தின் சிறந்த தருணமாகும். ஆனால் எங்களை குறிவைத்து திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், அது எங்களில் எவரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பயங்கரமானது. இது மிகக் கொடூரமான சம்பவம்,” என அவர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் தனது ஊடக ஆலோசகர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
"போண்டியில் தீவிர பாதுகாப்பு நிலைமை இருப்பதை நாங்கள் அறிவோம். அருகிலுள்ள மக்கள் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் திணைக்களத்தின் தகவல்களைப் பின்பற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என பிரதமர் அந்தோணி அல்பானீஸின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.













