SVA – MEPA இணைந்து கடல் சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்து


Shincheonji Volunteer Association (SVA) மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) இலங்கையின் கடல் சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் (MOU)  கையெழுத்திட்டன.

இதன் மூலம் கடல்சார் பாதுகாப்பு, சமூக விழிப்புணர்வு மற்றும் தேசிய மீட்பு முயற்சிகளில் இரு அமைப்புகளும் நீண்டகால கூட்டாண்மை ஒன்றை ஆரம்பித்துள்ளன.

நிகழ்வில் MEPA, வெல்லவத்தை பொலிஸ், நவோதயா சிறப்பு தேவைகள் பள்ளி மற்றும் Shincheonji தன்னார்வ அமைப்பின் தலைமைத்துவத்தினருடன் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சமீபத்திய இயற்கை அனர்த்தத்தின் போது உயிரிழந்தோருக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வு தொடங்கப்பட்டது.

நவோதயா பள்ளியின் முதல்வர் திருமதி லக்ஷ்மி கருணஜீவா, இந்த முயற்சியில் பங்கேற்கும் வாய்ப்பிற்கு நன்றியையும் எதிர்கால இணைப்பு திட்டங்களுக்கான நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

MEPA தலைவர் திரு. சமந்த குணசேகர, நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அரச மற்றும் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டி, SVA மேற்கொண்டு வரும் தன்னார்வப் பணிகளை பாராட்டினார்.

வெல்லவத்தை பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு SI திரு. பதிராணா, சமூக அடிப்படையிலான சுற்றுச்சூழல் செயற்பாடுகள் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்த ஒருங்கிணைந்த முயற்சிக்கு நன்றியைத் தெரிவித்தார்.

SVA – இலங்கை தலைவர், கடல் பாதுகாப்பின் அவசரத் தேவையை முன்னிறுத்தி, தன்னார்வ சேவைகள் மூலம் தேசிய முன்னேற்றத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் தொடர்ந்து பங்களிக்க அமைப்பு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

ஒப்பந்த கையெழுத்துக்குப் பின் நன்றிக் சான்றிதழ் பரிமாறப்பட்டு, நிகழ்வு நாட்டளவில் ஒரே நேரத்தில் நடைபெற்ற கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கையுடன் முடிவடைந்தது. வெல்லவத்தை, மட்டக்களப்பு காளாதி மற்றும் யாழ்ப்பாணம் கிழக்கு அரியாலை ஆகிய மூன்று இடங்களிலும் மொத்தம் 210 தன்னார்வலர்கள் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இலங்கையின் கடல் மற்றும் கடலோர சூழல்களைப் பாதுகாக்க அரச அமைப்புகளும் சமூக தன்னார்வலர்களும் ஒன்றிணையும் இந்த கூட்டாண்மை, எதிர்கால சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமையும் என இரு தரப்பினரும் தெரிவித்தனர்.