22 நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு நிவாரண உதவி !


டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக 22 வெளிநாடுகளிலிருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டு உதவிகளை முறையாக முகாமைத்துவம் செய்யவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் அவற்றை மக்களுக்கு வினைத்திறனுடன் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யவும் ஜனாதிபதியினால் வெளிநாட்டு நிவாரண ஒருங்கிணைப்புக்கான சிரேஷ்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான இந்தக் குழு, பல சந்தர்ப்பங்களில் ஒன்றுகூடி நிவாரணப் பணிகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகபட்ச வினைத்திறனை உறுதி செய்வதற்குத் தேவையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் ஊடாக நாட்டிற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு உதவிகள் ஒருகொடவத்தை களஞ்சிய வளாகத்தில் பாதுகாப்பாகவும் முறையாகவும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நிவாரணங்களைச் சரியான நேரத்தில் முறையாக வழங்குவதற்கான பொறிமுறையானது, தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையத்தின் ஊடாக தற்போது வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.