மட்டக்களப்பில் கோலாகலமாக வரவேற்கப்பட்ட புத்தாண்டு !


2026ஆம் ஆண்டுப் பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நள்ளிரவு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு நகரில் நள்ளிரவு 12.00 மணிக்கு பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெருமளவான பொதுமக்கள் இன, மத வேறுபாடுகளின்றி மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடியதைக் காணமுடிந்தது.

சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பலர் உயிரிழந்தும், சொத்துகளை இழந்தும் தவிக்கும் நிலையில், இம்முறை புத்தாண்டை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மாநகர முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.

முதல்வரின் அந்த வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நகருக்குள் ஒன்றுகூடி மிகவும் அமைதியான முறையிலும், அதேநேரம் உற்சாகத்துடனும் புத்தாண்டை வரவேற்றனர்.

மட்டக்களப்பில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும், மழையைப் பொருட்படுத்தாது மக்கள் திரண்டு வந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.