
புதிய ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு, பேத்தாழை பொதுநூலகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ கடமையேற்பு நிகழ்வு இன்று மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. சமூக மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான புதிய திட்டங்களுடன் நூலகத்தின் பணிகள் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக்கொடி, மாகாணசபைக்கொடி மற்றும் நூலகக் கொடி என்பன அதிதிகளாலும், நூலகப் பொறுப்பாளராலும் ஏற்றி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் மற்றும் நூலக கீதம் இசைக்கப்பட்டு, நாட்டின் மீதான பற்றுடனும் நூலகத்தின் கௌரவத்துடனும் நிகழ்வு ஆரம்பமானது.
நூலகப்பொறுப்பாளர் திருமதி. புஸ்பா தயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் திரு. கு.பத்மநீதன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும், கௌரவ உறுப்பினர் திரு. ந.நிமல்ராஜ், சபையின் செயலாளர் திரு. சு.ராஜ்கீதன், வாழைச்சேனை இந்து கனிஷ்ட வித்தியாலய அதிபர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித் மற்றும் விபுலானந்தர் கலை, இலக்கிய மன்றத்தின் செயலாளர் கவிஞர் த.சர்மிதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
அரசு உத்தியோகத்தர்களின் கடமை மற்றும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும் வகையில், புதிய ஆண்டுக்கான உத்தியோகபூர்வ சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மங்கல விளக்கேற்றப்பட்டு, புத்தாண்டு இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி உபசாரத்துடன் மகிழ்ச்சி பகிரப்பட்டது.
இந்த ஆண்டின் விசேட அம்சமாக, வாசகர்களின் அறிவுப் பசியைத் தூண்டும் வகையில் நூலக நுழைவாயிலில் “வாராந்த நூலக சுவர் இதழ்” எனும் புதிய திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனை உபதவிசாளர் கு.பத்மநீதன் அவர்கள் திரைநீக்கம் செய்து உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
சுவர் இதழின் சிறப்பம்சங்கள்:
** நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்கள் மிக இலகுவாக தகவல்களைப் பெற வழிவகை செய்கிறது.
** உள்ளூர் எழுத்தாளர்கள், ஆளுமைகள் மற்றும் பிரதேசத்தின் சிறப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டும்.
** உள்ளூர் செய்திகள் முதல் உலக வரலாறு வரையிலான பல்வேறு தகவல்கள் இதில் உள்ளடக்கப்படும்.
** ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த சுவர் இதழ் புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப் படவுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள், பேத்தாழை பொதுநூலகத்தின் சேவைகள் மென்மேலும் விரிவடைய வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், தொழில்நுட்பம் வளரும் இக்காலகட்டத்தில் இவ்வாறான ஆக்கபூர்வமான முயற்சிகள் சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு மிக முக்கியம் எனச் சுட்டிக்காட்டினர்.
நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் விபுலானந்தர் வாசகர் வட்ட உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இந்த புத்தாண்டு ஆரம்ப விழா ஒரு புதிய எழுச்சியுடன் நிறைவு பெற்றது.



.jpeg)
.jpeg)
.jpeg)




.jpeg)


.jpeg)



.jpg)