கொழும்பு மாநகரசபை வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த SLMC உறுப்பினர் ஸொஹாரா புஹாரியின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தம் - நிஸாம் காரியப்பர்



கொழும்பு மாநகரசபை வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஸொஹாரா புஹாரியின் கட்சி உறுப்பினர் பதவி உடன் அமுலுக்கு வரும்வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மாநகரசபை உறுப்பினர் ஸொஹாரா புஹாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு மாநகர சபையின் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுக்கு எதிராக உள்ள கட்சியின் தெளிவான தீர்மானத்திற்குப் புறம்பாக, நீங்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த விடயம் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

கொழும்பு மாநகர சபை வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென கட்சி எடுத்த தீர்மானம், நீங்கள் கலந்து கொண்ட குழுக் கூட்டத்தில், கட்சி தலைவர் ரவுப் ஹகீமினால் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டது என்பதை இங்கு குறிப்பாகச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அந்தக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்று, கட்சியின் நிலைப்பாட்டை முழுமையாக அறிந்திருந்தபோதும், கட்சி தலைமைத்துவத்தின் தெளிவான அறிவுறுத்தல்களுக்கு முரணாக நீங்கள் செயல்பட்டுள்ளீர்கள். உங்களின் இந்த நடவடிக்கை கட்சின் ஒழுக்கத்தை கடுமையாகவும் தீவிரமாகவும் மீறும் செயலாகும். இதை கட்சி மிகுந்த கவலையுடன் பார்க்கிறது.

இந்நிலையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி தலைவர் ரவுப் ஹகீமின் அறிவுறுத்தலின் பேரில், உங்கள் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக இடைநிறுத்தப்படுவதாக இத்துடன் உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

மேலும், உங்கள் மீது ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை, கட்சி உறுப்பினர் பதவி நீக்கம் எடுக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விளக்கும் வகையில், சத்தியப்பிரமாணம் மூலம் உங்கள் விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்தக் கடிதம் கிடைத்த நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் இவ்விளக்கம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் விளக்கமளிக்க தவறினால், முன்னறிவில் எதுவுமின்றி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.