பேராதனை பல்கலைக்கழகத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 8 பேர் காயம் !


குளவிக் கொட்டுக்கு இலக்காகி காயமடைந்த பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் உட்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று திங்கட்கிழமை (2) பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைபீடத்துக்கு அருகில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 8 பேரும் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஆறு பேர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் இருவர் என 8 பேர் குளவிக் கொட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலைப்பீடத்தின் அருகே எந்த குளவிக் கூடுகளும் காணப்படவில்லை என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அக்பர் பாலத்தின் கீழ்ப் பகுதியில் குளவிக் கூடுகள் இருப்பதாகவும் வழக்கமாக பொதுப் பட்டமளிப்பு விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே, அந்த குளவிக் கூடுகளை அகற்ற பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது 8 பேரை குளவிகள் தாக்கியதையடுத்து, குளவிக்கூடுகள் உள்ள இடங்களை கண்டறிந்து, அவற்றை நீக்குவது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.