ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கடற்படையினரால் கைது !


மன்னார் - நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில், ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து, சுமார் 17 கிலோகிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார், நச்சிக்குடா பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்கள் 26 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர்கள், ஆமை இறைச்சி, ஆமை முட்டைகள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.