ஆசிரியர் நியமனம் கோரி ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சுக்கு முன்பாக பாரிய போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை - ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் !



பாடசாலைகளில் கடந்த 7 வருடங்களாக கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் தமக்கு முறையான ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கோரி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் நேற்று திங்கட்கிழமை (02) ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்வி அமைச்சுக்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.

சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் எனப் பல்வேறு வடிவங்களில் நேற்று கொழும்பில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த கால அரசாங்கங்களின் போது தற்காலிக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்ட ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தமது நியமனங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி கடந்த 26ஆம் திகதி முதல் நேற்று வரை சுமார் 8 நாட்களாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நாடளாவிய ரீதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் ஒன்றுகூடி, தமது நியமனங்கள் தொடர்பில் நிலையான தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்வி அமைச்சுக்கு முன்பாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தாங்கள் நீண்டகாலமாகப் பங்களிப்பு செய்துள்ள போதிலும், தற்போதைய அரசாங்கம் தமக்கு முறையான ஆசிரியர் நியமனங்களை வழங்காமல் மீண்டும் போட்டிப் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்குமாறு கூறுவது அநீதியானது எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

சுமார் 8 நாட்களாகத் தொடரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல்நிலை மிக மோசமடைந்த நிலையில், இதுவரை 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தமக்கான தீர்வு கிடைக்கும் வரை களத்தை விட்டு நகரப்போவதில்லை எனப் போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

மேலும் ஆசிரியர் சேவைக்கு அநீதி இழைக்காதே", "எமது 7 வருட கால உழைப்பிற்கு நியாயம் வழங்கு", "ஜனாதிபதி அவர்களே எமது குரலுக்குச் செவிசாயுங்கள்", "ஏழு வருடங்களாக நாம் கற்பித்தது தகுதியல்லவா?" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் முன்னேறிச் செல்வதைத் தடுப்பதற்காக ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்வி அமைச்சுக்கு முன்பாக பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க குறிப்பிடுகையில்,

கடந்த ஏழு வருடங்களாக வகுப்பறைகளில் பிள்ளைகளுக்குக் கற்பித்த ஆசிரியர்களின் சேவையைத் தொடர இடமளிக்குமாறு அதிகாரிகளிடம் கோரினோம். எனினும் அரசாங்கம் அதனைக் கவனத்தில் கொள்ளாமையால் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மஹிந்த ஜயசிங்க மற்றும் சந்தன சூரியாராச்சி போன்ற அதிகாரிகள் தமக்குத் தேவையானதை மட்டும் செய்ய முடியும் என்று நினைக்க வேண்டாம். போராட்டங்களை எப்படி நடத்துவது என்று எமக்குக் கற்றுக்கொடுத்தவர்களே நீங்கள்தான். இப்போது அதை உங்களை விடச் சிறப்பாகச் செய்ய எங்களுக்குத் தெரியும்.

செவ்வாய்க்கிழமை (3) ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் எமக்குச் சாதகமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். எவ்வாறாயினும் எமக்கான தீர்வினைப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை.

இந்தப் போராட்டத்தை அடக்க நினைத்தால், இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு திரள்வார்கள். அன்று நீங்கள் செய்தது முட்டாள்தனமான வேலை என்று வருந்த நேரிடும். எமக்கு எந்த அரசியல் முத்திரையும் குத்த முனைய வேண்டாம். எமது போராட்டம் நியாயமான கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றார்.