மக்கள் ஏற்றுக்கொள்ளாத, அவர்களால் கையாளமுடியாத சட்டங்களை நாம் மக்கள்மீது திணிக்கமாட்டோம். ஆகையினாலேயே புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவைப் பகிரங்கமாக வெளியிட்டு, பொதுமக்களிடமிருந்து அதுகுறித்த அபிப்பிராயங்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றின் அடிப்படையில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அவ்வரைவு மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தீவிர கரிசனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவ்வரைவு தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை அனுப்பிவைப்பதற்கு நீதியமைச்சினால் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் கருத்தறியும் காலப்பகுதி இன்னும் ஒரு வாரகாலத்தில் முடிவுக்கு வரவுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் வியாழக்கிழமை (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து பரவலாக முன்வைக்கப்பட்டுவரும் கரிசனைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணக்கார, '1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு, பின்னர் நிரந்தர சட்டமாக்கப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கி, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதிய சட்டத்தைக் கொண்டுவருவதாக நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்கமைவாக இப்புதிய சட்டம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்தும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் பெறப்பட்டு ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையிலான நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய சட்ட வரைபை பொதுமக்களின் கருத்தறிவதற்காகப் பகிரங்கமாக வெளியிட்டு, இருமாத கால அவகாசத்தை வழங்கியிருக்கிறோம்' எனச் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, 'மக்கள் ஏற்றுக்கொள்ளாத, அவர்களால் கையாளமுடியாத சட்டங்களை நாம் மக்கள்மீது திணிக்கமாட்டோம். புதிய சட்டங்களை உருவாக்கி, எமது ஆட்சிக்காலத்தில் நாம் இத்தனை சட்டங்களை உருவாக்கினோம் எனப் பெருமிதம் கொள்ளவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. மாறாக எந்தவொரு சட்டம் உருவாக்கப்பட்டாலும், நாட்டுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன உறுதிப்படுத்தப்படும். ஆகையினாலேயே புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வெளியிட்டு, அதுகுறித்த அபிப்பிராயங்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றின் அடிப்படையில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அவ்வரைவு மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்' என்றும் அவர் எடுத்துரைத்தார்.
அதனையடுத்து 'இருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்றே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்தது. தற்போதைய சூழ்நிலையில் இதற்கென புதிதாக பிரத்யேக சட்டமொன்று அவசியமில்லை என்ற நிலைப்பாட்டையே மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன வெளிப்படுத்தி வந்தன. ஆனால் ஆட்சிபீடத்தில் ஏறிய பின்னர் அந்நிலைப்பாட்டிலிருந்து விலகி, பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்ய முற்படுவது ஏன்?' என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியதாவது;
நாம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவோம் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தோம். அவ்வாக்குறுதியை நிறைவேற்றுவோம். ஆனால் உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல் போன்ற சம்பவங்கள் எவ்வகையிலும் ஏற்புடையவை அல்ல. அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கும், பயங்கரவாத செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் 'பயங்கரவாதம்' எனும் பதம் மிகவும் குறிப்பாக வரையறை செய்யப்பட்ட, சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறான சட்டமொன்று அவசியமாகும். மாறாக புதிய சட்டத்தைக் கொண்டுவந்து எந்தவொரு தரப்பினரையும் ஒடுக்கவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. பொதுமக்களின் சுதந்திரம் எப்போதும் பேணப்படும் என்றார்.












.jpeg)