வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு ; மட்டக்களப்பில் அதிக்கூடிய மழை வீழ்ச்சி பதிவு !


மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) அதிகபட்சமாக 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, நுவரெலியாவில் மிகக் குறைந்த வெப்பநிலை 13.4°C ஆக பதிவாகியுள்ளது.

நாட்டின் தென்கிழக்கே, தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காலி முதல் அம்பாந்தோட்டை வரையிலான கரையோரப் பகுதிகளிலும், மட்டக்களப்பு வழியாக திருகோணமலை வரையிலான கரையோரப் பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழவுள்ள பிற கடல் பகுதிகளில், மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

களுத்துறை முதல் புத்தளம் மற்றும் மன்னார் வரையிலான கரையோரப் பகுதிகளிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இந்தக் கரையோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும், அதேவேளை நாட்டை சூழவுள்ள பிற கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் நிலைமைகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.