(சித்தா)மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியில் 2025/2026 ஆண்டு சாதனை புரிந்த மாணவச் செல்வங்களை கௌரவிக்கும் சாதனையாளர் பாராட்டு விழா 05.02.2026 அன்று பாடசாலை கலைக்கூடத்தில் பாடசாலையின் முதல்வர் எம். சபேஸ்குமார் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் பிரதம அதிதியாக மேலதிக செயலாளர் சுஜாதா குலேந்திரகுமார், கொள்கை திட்டமிடல் மற்றும் செயலாற்றுகை மீளாய்வு, கல்வி அமைச்சு, இசுறுபாய கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருந்தார். மேலும் கெளரவ, சிறப்பு அதிதிகளுடன் நடைபெற்ற இவ்விழாவின் போது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற்ற மாணவர்கள், க.பொ.த (சா/த) பரீட்சையில் 9A பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டுப் பரிசுகளுடன் கௌரவிக்கப்பட்டனர்.
இவ் விழாவில் பிரதம அதிதி தமது உரையில்,
இப்பாடசாலை எண்ணிக்கையிலும் தரத்திலும் இத்தகைய சிறப்பான சாதனைகளை தொடர்ச்சியாகப் புரிந்து வருவதையிட்டு பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வு மிக நேர்த்தியான திட்டமிடலுடனும், சிறந்த நேர முகாமைத்துவத்துடனும் ஒழுங்காகவும் சிறப்பாகவும் நடைபெற்றதாக பாராட்டினார். அத்துடன் நடைபெற்ற கலை நிகழ்வுகள், பாடசாலை பற்றியதான மாணவர்களின் முன்வைப்புக்கள் (Presentation), இரு மொழி மூலமான நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் ஆளுமை என அனைத்து விடயங்களையும் உன்னிப்பாக அவதானித்துப் பாராட்டினார். அத்துடன், ஒரு கல்வி நிர்வாக சேவை அதிகாரியின் தலைமையில் நடைபெற்ற விழா என்பதனை இது வெளிப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டு, பாடசாலை முதல்வரைப் பெருமைப்படுத்திப் பேசியதோடு, பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா அணியினர், மாணவர்கள், பெற்றோர், பழைய மாணவர் உட்பட அனைத்து தரப்பினரையும் மனமார்ந்த பாராட்டுக்களுடன் வாழ்த்தினார்.




.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)

















