
கொழும்பு துறைமுக வளாகத்தில் பாரந்தூக்கி இயந்திரமொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (19) பிற்பகல் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துறைமுக வளாகத்தின் மூன்றாம் கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த குறித்த பாரந்தூக்கி இயந்திரம், முன்பக்கத்திலிருந்து அதேதிசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ரிதிகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துடன் தொடர்புடைய பாரந்தூக்கி இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கரையோர பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











.jpeg)