"எமது கட்சி விவகாரத்தில் தலையிட அர்ச்சுனாவுக்கு அவசியமில்லை – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கடும் பதிலடி!


எமது கட்சியின் ஆசனம் தொடர்பில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதை அர்ச்சுனாவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன். இதனை எவரும் பிரச்சினைக்குரியதாக்க வேண்டியதில்லை.எமது கட்சிக்கான ஆசனத்தை நாங்கள் பகிர்ந்துக் கொண்டுள்ளோம். சிறிதரன் முன்வரிசையில் இருப்பதை பற்றி அர்ச்சுனா கவலைப்பட வேண்டிய தேவையில்லை. இது எமது கட்சி விவகாரம்.இதைப்பற்றி அர்ச்சுனா தொடர்ந்து பேச வேண்டிய அவசியமில்லை. என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு கடுமையாக பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற அமர்வின் போது, ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் இந்த விடயத்தை முன்வைக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சபையில் முன்வரிசை ஆசனம் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட கட்சியின் தலைவர்கள், குழுத் தலைவர்களுக்கு வழங்கப்படும். சிறிதரனுக்கு முன்வரிசையில் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. அது ஏன் இதற்கு பதிலளியுங்கள் என்றார்.

இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய சபாநாயகர், அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவே சிறிரதன் உள்ளார். சபாநாயகரின் அபிலாசைக்கு அமைவாகவே அவருக்கு முன்வரிசையில் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது உரையாற்றுவதற்கு சாணக்கியன் அனுமதி கோரிய போது அதற்கு சபாநாயகர் இடமளிக்காத காரணத்தால் , சாணக்கியன் தொடர்ந்து பேசுவதற்கு முற்பட்டார். இதன்போது அவருக்கு உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு அமைய செயற்படுவதாக கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. அர்ச்சுனா எனது பெயரை குறிப்பிட்டு பேசினார். அதற்கு பதிலளிக்க அனுமதி கோரும் போது நீங்கள் (சபாநாயகர்) அதற்கு இடமளிப்பதில்லை. உங்களால் தான் சபையில் காலையிலே முரண்பாடுகள் ஏற்படுகிறது. உங்களுக்கு காது கேட்கவில்லையா என்பதும் தெரியவில்லை என்று சபாநாயகரை கடுமையாக சாடினார்.

எமது கட்சியின் ஆசனம் தொடர்பில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதை அர்ச்சுனாவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.முன்வரிசையில் நான் உள்ளேன், பிறிதொன்றில் சிறிதரன் உள்ளார். அதை எவரும் பிரச்சினைக்குரியதாக்க வேண்டியதில்லை.

எமது கட்சிக்கான ஆசனத்தை நாங்கள் பகிர்ந்துக் கொண்டுள்ளோம். சிறிதரன் முன்வரிசையில் இருப்பதை பற்றி அர்ச்சுனா கவலைப்பட வேண்டிய தேவையில்லை. இது எமது கட்சி விவகாரம். இதை பற்றி அர்ச்சுனா தொடர்ந்து பேச வேண்டிய அவசியமில்லை.