தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் திரும்பிய மின்சார சபை ஊழியர்கள்


தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இலங்கை மின்சார சபையைக் கலைக்கும் திகதியை வர்த்தமானியில் வெளியிட்டால், முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக மின்சார தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள தீர்மானத்திற்கு, மின்சார சபையின் ஓய்வுத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த ஊழியர் குழு, குறித்த தொழிற்சங்கத் தலைவர்களால் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் மின்சார சபையின் ஒட்டுமொத்த கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்தத் தொழிற்சங்கங்களால் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் வெற்று கோரிக்கைகள் என்றும், அவை மறுசீரமைப்புச் செயல்முறையைத் தடுப்பது அல்லது நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்றும் குறித்த ஊழியர் குழு குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த தொழிற்சங்கங்கள் இலங்கை மின்சார சபையின் ஊழியர்களில் 25% அங்கத்துவத்தைக் கூடக் கொண்டிருக்கவில்லை என ஓய்வுத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், இந்த மறுசீரமைப்புகளைச் சீர்குலைக்க அல்லது தாமதப்படுத்த எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் தமது ஊழியர் குழு எதிர்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் விநியோகத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் சட்டவிரோதமானது மற்றும் அனுமதிக்க முடியாதது என்று சுட்டிக்காட்டும் அவர்கள், மின்சார சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மேலும் தாமதமின்றி உரிய திகதியை வர்த்தமானியில் வெளியிடுமாறும், ஓய்வு கோரிய ஊழியர்களை அவர்களின் உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சேவையிலிருந்து விடுவிக்க அனுமதிக்குமாறும் கோரியுள்ளனர்.