பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் நாமல் போட்டியிடுவார் - டி.வி.சானக



பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாக நாமல் ராஜபக்ஷ 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் .அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டுவதால் ராஜபக்ஷர்களின் வழக்குகளை அரசாங்கம் துரிதப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை நாழுக்கு நாள் குறைவடைந்து செல்கிறதே தவிர எழுச்சிப்பெறவில்லை. கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை தேசிய மக்கள் சக்தியினர் முன்வைத்தார்கள். அந்தக் குற்றச்சாட்டுக்கள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளது.

எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் எண்ணம் போல் எதனையும் சொல்லலாம்,ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அனைத்தையும் செய்ய முடியாது என்பதற்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும்.பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாக ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ போட்டியிடுவார்.சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பலமான அரசியல் கூட்டணியை நிச்சயம் உருவாக்குவோம்.

.அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டுவதால் ராஜபக்ஷர்களின் வழக்குகளை அரசாங்கம் துரிதப்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி மோசடிகளை மூடிமறைக்க முடியாது என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.