பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் கலந்த மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது !


பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சந்தேகநபர் ஒருவர், அட்டன் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் வியாழக்கிழமை (19) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மஸ்கெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அட்டன் பிரதேச பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் மஸ்கெலியா நகரில் ஒரு ஆயுர்வேத மூலிகை மருந்துக் கடையை நடத்தி வருவதாகவும், கடைக்கு வரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ரூ. 250 என்ற விலைக்கு சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, அட்டன் பிரதேச பொறுப்பு உதவி பொலிஸ் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் கடை சோதனையிடப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது, அவர் விற்பனை செய்வதற்காக கடையில் மறைத்து வைத்திருந்த 648 சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதக பொதிகள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் மதிப்பு ரூ. 1,62,000 என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததுடன், சந்தேக நபர் மஸ்கெலியா பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞன் எனவும் தெரிவித்துள்ளனர்.