கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை



நாட்டின் பல மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை (19) பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, தென், ஊவா, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டம் என்பன பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அறிவிக்கக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். அத்துடன், இந்தப் பிரதேசங்களில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களைக் குறைத்துக்கொள்வதற்குப் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.