யால தேசிய பூங்காவிற்கு அருகில் துப்பாக்கிச் சூடு


யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த, ஹீன்வல வனஜீவராசிகள் பாதுகாப்பு சாவடிக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (21) காலை கார் ஒன்றில் வந்த குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதையடுத்து, ஹீன்வல பாதுகாப்பு சாவடியில் கடமையில் இருந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் காரில் ஏறி தப்பியோடிவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விலங்குகளை வேட்டையாடும் நோக்கிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தப்பியோடிய கார் மற்றும் சந்தேகநபர்களைக் கண்டுபிடிப்பதற்காக கிரிந்த பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.