வாகனம் பழையது, மொபைல் எண் புதியதா - QR பதிவில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க புதிய நடைமுறை !


நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 88 இலட்சம் வாகனங்களில் இதுவரையில் 55 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் எரிபொருள் கியூஆர் முறைமையில் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை 72 இலட்சம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது ஆளும் கட்சி உறப்பினர் ஜீ.டி.சூரிய பண்டாரவினால் கியூஆர் முறை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

எரிபொருளை அதிகளவில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கும், அவசியமின்றி சேகரிக்கப்பதை தடுப்பதற்கும் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாதவாறு எரிபொருளை சேமிப்பதற்காகவும் தற்போது கியூஆர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கியூஆர் முறையை பெற்றுக்கொள்ளும் போது ஏற்கனவே பயன்படுத்திய வாகனம், ஏற்கனவே பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்களை கொண்டவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.

அத்துடன் பழைய வாகனம் இருந்தும் புதிய தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துபவர்களுக்கும் பழைய தொலைபேசி இலக்கம், ஆனால் புதிய வாகனத்தை வாங்கியுள்ளவர்களுக்கு பிரச்சினை இருக்கும். ஆனால் வாகனமும் புதியது தொலைபேசியும் புதியது என்றால் எந்தப் பிரச்சினையும் கிடையாது.

நாட்டில் 88 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் 70 இலட்சம் வாகனங்களே 2023இல் கியூஆர் முறைமைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இம்முறை 72 இலட்சமாக அதிகரிக்கலாம். இப்போது 55 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கியூஆர் முறைமையில் பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்தும் புதிய பதிவுகள் இடம்பெறுகின்றன. இதன்போது 27 இலட்சம் வரையிலான வாகனங்களுக்கு மேற்கூறியவாறு பிரச்சினைகளால் பதிவுகளை செய்யமுடியாமல் இருந்தது. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரச்சினையை தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு இணையத்தளத்திலேயே புதியதை பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்போது மோசடி நடந்தால் அது இணைய மோசடியாக கருதப்படும்.

இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூஆர் முறைமையை மீறி எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட முடியாது. அவ்வாறான மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.