இதுதொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெளிநாடுகளில் வசிக்கும் 15 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு இந்நாட்டு தேர்தல்களில் வாக்களிப்பதற்கான சட்ட மற்றும் நடைமுறை ரீதியான வழிமுறைகளைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் குறிப்பிடுகைையில், நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிப்பதில் வாய்ப்பளிக்காமல் இருப்பது அநீதியானது.
இது இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதொரு திருப்புமுனையாகும். பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் 16 சிவில் அமைப்புகளின் கருத்துக்கள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னர், அது குறித்து விரிவாக ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.
குழுவின் தலைவர், முன்னாள் தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எல். ஏ. பி. கே. குலரத்ன குறிப்பிடுகையில்,
இந்த அறிக்கையைத் தயாரிக்கும் போது வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மாணவர்கள், இரட்டைப் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் ஏனைய காரணங்களுக்காக வெளிநாடு சென்றவர்கள் என நான்கு பிரிவினர் அடையாளப் காணப்பட்டுள்ளனர். இச்செயற்பாட்டை 4 பிரதான துறைகளின் கீழ் நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
அதாவது வாக்காளர் பதிவு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இரட்டைப் குடியுரிமை பெற்றவர்களை முறையாகப் பதிவு செய்யும் நடைமுறைகள்.
தேர்தல் பிரசாரம், வெளிநாடுகளில் உள்ள வாக்காளர்களுக்காகப் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் தாக்கம்.
வாக்களித்தல், தூதரகங்கள் ஊடாக, தபால் மூலம் அல்லது பாதுகாப்பான இணையவழி முறைகளைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள்.
வாக்குகளை எண்ணுதல் மற்றும் முடிவுகளை வெளியிடுதல் ஆகியனவாகும் என்றார்.
பல வருடங்களாகக் கலந்துரையாடப்பட்டு வந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக, அமைச்சரவை தீர்மானத்தின்படி 2025 டிசம்பரில் இக்குழு நியமிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே, மூன்று மாதங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் அனைத்து தரப்பினரினதும் கருத்துக்களைக் கேட்டறிந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை வழங்குவதற்காக இவ்வாறான முறையான வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 90- தசாப்தத்திலிருந்து இது குறித்து விவாதங்கள் இடம்பெற்று வந்த போதிலும், முறையான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது இம்முறையாகும். இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காக அரசியல் கட்சிகள், சுயாதீன அமைப்புகள், வெளிநாடுகளில் வசிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு மேலதிகமாக, உள்நாட்டில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள், சுங்க அதிகாரிகள் போன்ற உத்தியோகத்தர்கள், மீனவர்கள், சிறைக்கைதிகள் மற்றும் நோயுற்ற நிலையில் உள்ளவர்களுக்காக 'முன்கூட்டியே வாக்களித்தல் அல்லது நடமாடும் வாக்களிப்பு முறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் எதிர்காலத்தில் பொதுமக்களின் கலந்துரையாடலுக்குத் திறந்துவிடப்படவுள்ளதுடன், இது நாட்டின் ஜனநாயகப் போக்கை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.







.jpg)


.jpg)


