தேரர்கள் வெளிநாடு செல்வதற்கு மகாநாயக்க தேரர்களின் பரிந்துரை கட்டாயம் - புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர்


புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் புதிய தீர்மானத்தின்படி, தேரர்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால், பிரதேச நாயக்க தேரர் மற்றும் மகாநாயக்க தேரர் ஆகியோரின் பரிந்துரையைப் பெறுவது இனிமேல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தபோதிலும், கடந்த காலங்களில் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகேதர திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் பதிவாளர் தேரர்கள் நடத்திய கலந்துரையாடலுக்குப் பின்னர், இது அத்தியாவசியமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதுடன், இது குறித்து மகாநாயக்க தேரர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுடன் தேரர்கள் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விஹார தேவாலகம் சட்டத்தை விரைவாகத் திருத்துவது குறித்து பதிவாளர் தேரர்கள், சட்டமா அதிபர் மற்றும் புத்தசாசன அமைச்சின் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை (29) விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

அந்தச் சட்டத்தின் 41 மற்றும் 42 ஆவது பிரிவுகளுக்கு இணங்க, இவ்வாறான விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான சபையிடம் ஒப்படைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.