செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனின் கனகர் கிராமம் அரசியல் வரலாற்று நாவல் அறிமுக விழா!

(ரவிப்ரியா)
மட்டக்களப்பு  நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் ஞாயிறு (26) மாலை 3.00 மணியளவில் கதிரவன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கதிரவன் இன்பராசா தலைமையில் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனின் 'கனகர் கிராமம்' என்னும் அரசியல் சமூக வராலாற்று நாவல் செம்மையாக அறிமுகம் கண்டது.
துடிப்புள்ள இலக்கிய பங்களிப்புகளில் முதன்மை பெற்று நிலை பெற்றுள்ள கதிரவன் கலைக் கழகம் அறிமுக நிகழ்வை மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைத்திருந்ததை நேரடியாகவே காணக்கூடியதாக இருந்தது.அளவான மண்டபத்தில் நிரம்பியிருந்த விருந்தினர்கள் துறைசார் ஆர்வலர்கள் அபிமானிகள் என அமர் கனகரட்ணம் அரங்கு இலக்கிய செஞ்செழிப்புடன் காணப்பட்டது.
ஆளுமைமிகு செங்கதிரோன் தனது இயல்பான ஆளுமையை முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்கமைய அரங்கை நிறைத்து நிரூபித்துள்ளார் என்றே எண்ணத் தோன்றியது. வழக்கமான சம்பிரதாய நிகழ்வுகளைக் தொடர்ந்து தலைவரின் நூலாசிரியர் பற்றிய உணர்வுபூர்வமான  இலக்கிய முழக்கத்துடன் அறிமுக விழா களை கட்டத் தொடங்கியது.

முதன்மை அதிதிகள் வரிசையில் பேராசிரியர் சந்திரசேகரம் பண்பாட்டு வால்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் வைத்திய கலாநிதி இரா முரளீஸ்வரன் இலக்கிய கலாநிதி கவிக்கோ வெல்லவூர்க்கோபால் ஆகியோர் வீற்றிருக்க ஆசி வழங்க சிவயோகச் செல்வன் சாம்பசிவம், அருட்பணி அ.அ.நவரெத்தினம் (பாலாஜி) ஒய்வு நிலை விரிவுரையாளர் ஆகியோர் முகங்களில் ஆன்மிக ஒளி கசிந்து கொண்டிருந்தது.

ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளர் க.பாஸ்கரன் சைவப் புரவலர் தமிழ்ச் சங்க தலைவர் வி.றஞ்சிதமூர்த்தி சைவப்புலவர் திருமதி சிவானந்தசோதி ஞானசூரியம் கலாபூஷணம் ஏ.பீர்மகம்மது மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார இணைப்பாளர் கி.குணநாயகம் ஆகியோர் தயார் நிலையில் இருக்க வரவேற்புரை நூல் அறிமுக உரை என்பவற்றைத் தொடர்ந்து இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் த.குணராஜா முதற் பிரதியைப் பெற்றுக்கொள்ள அதிகாரிகளுக்கான சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

எல்லோருமே எதிர்பார்த்துக் காத்திருந்த நூல் நயவுரையை உதவிக் கல்விப் பணிப்பாளர் அழகையா ஜெயபாலன் நேர வரையறை பேணி செய்து முடித்தார். தொடர்ந்து கிழக்கு பல்கலைக் கழக தொழில்துறை பேராசிரியர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றியதுடன் மேலும் சில பிரமுகர்களுக்கு வாழ்த்துரை வழங்கவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. இது செங்கதிரோனுக்குரிய பாராட்டுவிழாவா? என்று வியக்கும் வண்ணம் பல நிறுவனங்கள் சார்பான பாராட்டு வைபவங்களும் இடைச் செருகலாக இடம் பெறவே செய்தன. இது நூல் அறிமுகத்தின் கனதியைக் குறைக்கவே செய்தன. கதிரவன் கலைக் கழகம் நூலாசிரியரின் 75வது பிறந்தநாளை முன்னிட்டே பாராட்டு ஏற்பாடுகளையும் திணித்தது அவர்களைப் பொறுத்தவரை தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். எனவே இதை நல்ல விடயமாகவே கருதலாம்.

இறுதியில் நூலாசிரியரின் இரத்தினம் சுருக்கமான ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது. மொத்தத்தில் ஒரு தரமான இலக்கிய சங்கமத்தில் சஞ்சரித்த திருப்தி இருந்தாலும் அங்கு சில முதுசங்களின் ஆதங்கங்களும் காதுக்கு எட்டவே செய்தன. அரசியல் விடயங்களை வெளிப்படையாக அல்லாமல் நாசூக்காக சொல்லியிருந்தால் நாவலின் தரமும் இலக்கிய வாசனையும் இன்னும் அதிகரித்திருக்கும் என்பதே அவர்களின் ஆதங்கமாகும். நூல் அறிமுகம் மற்றும் அதுசார்ந்த உரைகள் எல்லாமே  நூலாசிரியர் பற்றியே சுற்றி சுழன்றதால் நாவலின் ஊடுருவல்  பார்வை சற்று மங்கலானதோ? தெரியவில்லை. எனினும் வித்தியாசமான துணிச்சலான வெளிப்படையான உள்ளதை உள்ளபடி புனைவேதுமின்றி உரைக்கும் வரலாற்றுப் பொக்கிஷம் இந்த நாவல் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

இந்த நிகழ்வில் கிழக்கு பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மேனகா தனதுரையில் முக்கிய அறைகூவல் ஒன்றை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 18-40 வயதுப் பிரிவினருக்கான வாசிப்பு பழக்கத்தை உருவாக்கும் உரிய இலக்கிய வடிவம் பற்றிய ஆலோசனைகளை வழங்குமாறு கோரியுள்ளார். இதற்கான ஆதரவை வழங்குவது காலத்தின் தேவையாகும்.