போதைப்பொருள் கடத்தல்: பிக்குகளை வழிநடத்திய பிரதான சந்தேகநபருக்கு தடுப்புக்காவல்



கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான பிக்குவை, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
 
சந்தேக நபர் இன்று (27) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கடவத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணுகொலே அமிதானந்த என்ற இந்தச் சந்தேக நபர், தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்பதற்காகக் காத்திருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுடன் 22 பிக்குகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற இந்த பிரதான சந்தேக நபர் மிரிஸ்வத்தை பகுதியில் ஒளிந்திருந்துள்ளார்.

அங்கு வைத்து நேற்று (26) பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

அமிதானந்த என்ற இந்த பிக்குவின் மருத்துவ அறிக்கையின்படி, அவர் கைது செய்யப்படும் வேளையில் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய பிக்குகளைத் தாய்லாந்திற்கு அனுப்பியமை மற்றும் அவர்களை வழிநடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட 'WhatsApp' கணக்கை இயக்கியமை போன்றவற்றை இவரே முன்னின்று செய்துள்ளமை நீதிமன்றில் அம்பலமானது.

சுமார் 112 கிலோகிராம் எடையுள்ள "குஷ்" (Kush) மற்றும் "ஹேஷ்" (Hash) வகை போதைப்பொருட்களை மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பொதிகளில் மறைத்து வைத்து இவர்கள் நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இதன் பெறுமதி 110 கோடி ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.