
அரசாங்கத்துக்குள் தான் திருடர்கள் உள்ளார்கள். 2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும். சைபர் தாக்குதலை நடத்துபவர்கள் திறைசேரியின் செயலாளர் உட்பட 16 உயர்நிலை அதிகாரிகளின் கையொப்பங்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்வார்களா என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொகுதி அமைப்பாளர் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் திருடர்கள் என்று விமர்சித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் நூதனமான முறையில் அரச நிதியை மோசடி செய்கிறது. திறைசேரியால் அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் அரசமுறை கடன் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்டமை தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.
2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்டது என்று குறிப்பிட முடியாது. சைபர் தாக்குதலை நடத்துபவர்கள் திறைசேரியின் செயலாளர் உட்பட 16 உயர்நிலை அதிகாரிகளின் கையொப்பங்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்வார்களா என்ற கேள்விக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இதுவரையில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இதுவரையில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. திருடர்களை பிடிப்பதற்காக நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
அரசாங்கத்துக்குள் தான் திருடர்கள் உள்ளார்கள். 2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.





.jpg)






