40 நாடுகளுக்கு 30 நாட்கள் இலவச விசா - சுற்றுலாத்துறையை மேம்படுத்த அதிரடி முடிவு


சுற்றுலாத்துறை சேவை கைத் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு அமெரிக்கா, பிரித்தானியா, சீனா,இந்தியா,அவுஸ்ரேலியா உட்பட பிரதான 40 நாடுகளுக்கு 30 நாட்களுக்கு இலவச விசா வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்மானம் 06 மாதத்துக்கு ஒருமுறை மீள்பரிசீலிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்தும் பொருட்டு விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும் இந்தியா, தாய்லாந்து. இந்தோனேசியா, ரஸ்யா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்டிருந்தது.

வெளிவிவகாரம் அமைச்சரும், நானும் கூட்டாக இணைந்து அண்மையில் சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கமைய 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவுஸ்ரேலியா, ஆஸ்திரியா, பஹரைன், பெலராஸ், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நேபாளம், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான்,கஸகஸ்தான், குவைத்,

மலேசியா, நோர்வே, நெதர்லாந்து,நியூசிலாந்து,ஓமான், பாகிஸ்தான், போலந்து, கட்டார், ரஷ்யா, சவூதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவிஸ்லாந்து. தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு 30 நாட்களுக்கு சுற்றுலாவுக்கான இலவச விசா வழங்கப்படும். இந்த தீர்மானம் ஆறு மாதத்துக்கு ஒருமுறை மீள்பரிசீலிக்கப்படும் என்றார்.